Sunday, June 11, 2017

எங்க ஊரு லகான்

[2001 - Pittsburgh - நான் 'பெஞ்ச்'சில்,  இருக்கும் போது கிறுக்கியது இது. Was searching for it for a long time. Found it at last! Archiving .]
--------------------------------------------------------------------------------------------------

'லகான்' பார்த்தேன். தேசிய உணர்வுகள் பீறிடுவதற்குப் பதில், நாங்கள்  எங்க ஊரில் விளையாண்ட கிரிக்கட் போட்டி தான் ஞாபகம் வந்தது.

S.S.L.Cக்கு பிறகு எங்க வீட்டில் circket bat-ம் ஒரு அங்கம். "Bat-டன் ஐவர் ஆனோம்". ('இந்த மட்டையை என்னிக்குத் தூக்கிப் போடுறியோ அன்னைக்குத்தான் நீ உருப்படுவ - அப்பா')


எங்க ஊர் (முத்துக்கிருஷ்ணாபுரம், கடையநல்லூர்) ground-ஆனது ஊருக்கு நடுவில், ஆள் நடமாட்டம் நிறைந்த ஒரு 'பொட்டல்'. 'ட' வடிவில், வளைந்து செல்லும் சாலைக்கு நடுவில் இருந்ததால், மக்கள் short-cut ஆக அந்தப் பொட்டலின் வழியே 'ட'-வைக்க் கடப்பர்; 'கார்க்' பந்தால் அடி வாங்குவர். அதைச் சமாளிக்க மட்டுமே எங்களிடம் தனி இலாக உண்டு - "உங்களை யாரு இப்புக்கூடி வரச்சொன்னா? அப்புக்கூடிப் போகவேண்டியது தானே?".

மாலை நேரத்தில் பொட்டல் கடக்கும் வாலைக்குமரிகளின் கவன ஈர்ப்புத் தீர்மானத்திற்காக, விழுந்து விழுந்து fielding பண்ணியிருக்கேன். பலன் என்னவோ ஆக்ரா ஒப்பந்தம் தான்.


முதல் மாட்ச்
----------------

நடராஜ் காட்டடி அடிப்பான் ஆனால் கிரிக்கட் பற்றி நிறையத் தெரியாது. "ஏலே! Sixer மட்டும் தானா? Tenner ஏதாவது உண்டாடா? சொல்லு அதையும் அடிச்சிறுவோம்!". அவனை மாதிரி ஆட்களுடன், எங்களின் முதல் one-day விற்காக, எங்க ஊரிலிருந்து 10 மைல் தூரத்திலுள்ள கம்பனேரிக்கு SV கடை வாடகை சைக்கள்களில் கிளம்பியாயிற்று.

குறிப்பிடட குளத்தில் (Ground!) யாருமே இல்லை, ஒரு மாடு மேய்த்துக்கொண்டிருந்த சிறுவனைத் தவிர!  விபரம் சொன்னதும், "கொஞ்சம் இருங்க, எல்லோரும் பக்கத்து குளத்துல மாடு மேய்ச்சுக்கிட்டு இருக்காங்க, கூப்பிட்டு வந்துர்றேன் " என்று அரை மணி நேரத்தில் பத்து தலைப்பாய் கட்டிய  வீரர்களோடு வந்தான் .

கையெழுத்து மேட்ச் என்று முடிவானதால், உப்புக்குச் சப்பாணி முத்துக்கிருஷ்ணன் கேப்டன் ஆக்கப்பட்டான் . வலிய விதியால் அவர்கள் ஜெயித்து பேட் செய்யத் தீர்மானித்தார்கள் . Opening, நாங்கள் முதலில் பார்த்த மாடு மேய்த்த சிறுவன் (முத்துக்காளை!). பந்துக்கு பின்னால் எங்களை ஓடி ஓடிக் களைக்க வைத்த புண்ணியவான் ! கடைசி வரை out ஆகவில்லை (ஆக்க முடியவில்லை)! 20 ஓவரில் 2 விக்கட் இழப்புக்கு 130 சொச்சம் எடுத்தார்கள் . (குல தெய்வம் கருப்பசாமி துணையால், ஒரு கேட்ச், டைவ் அடித்துப் பிடித்திருந்தேன் !)

பேண்ட் போட்ட கிரிக்கட் வீரர்களாகிய எங்களது சேசிங் துவங்கியது 7 ஓவர்களில் 33 ரன்களில் all out! (முத்துக்களை 4 விக்கட் , ஒரு பல் !). என்னை கிளீன் போல்ட் ஆக்கிய அண்ணல் எங்களது லாலாக்கடைக்கு பால் வைப்பவர் ! அதற்குப் பின் அவருக்கு நான் கொடுத்த மரியாதையைக் கண்டு அப்பா ரொம்பவே ஆச்சரியப்பட்டார் .

பின்னர் அவர்களது கேப்டன் எங்களிடம் வந்து, "இம்புட்டு தூரம் வந்திருக்கீங்க! ஒன்னு செய்வோம், இதை டெஸ்ட் மேட்ச் ஆக்குவோம், நீங்கள் தொடர்ந்து ஆடுங்கள்" என்று அருள் பாலித்தார் .  அவமானத்தால் வெகுண்டு எழுந்து நாங்கள் இந்த முறை எடுத்த ரன்கள் 66! 

இவ்வாறாக எங்கள் முதல் மேட்ச் OneDay-ல் தொடங்கி Test-ல் முடிந்தது. வரும்போது முத்துகிருஷ்ணன் பேசவேயில்லை - கையெழுத்து போட்டு விட்டாராம்!

இம்முறை எங்கள் ஊர் பொட்டலை பழைய ஞாபகங்களுடன் அசை போட்டு மெல்லக்கடந்த போது, கார்க் பால் கரண்டைக்காலைத் தாக்கியது ! "அந்த வழியா சுத்திப் போங்களெம்ணேன்!!"





                                                                                                   - க. திருமலைக்குமார்


                                                (அந்நாளைய thirumalaikumar@bharatmail.com -ல் எழுதியது!)