எப்படி இருக்கே, ஆரோக்கிய ராசு? கல்யாணம்லாம் ஆயி செட்டிலாயிருப்பே! என்னிய ஞாபகம் இருக்கா? ஒண்ணுலருந்து எட்டாப்பு வரை உலகா ஸ்கூல்ல ஒண்ணாப் படிச்சாலும், கடைசி 2 வருஷத்தில என்னமோ நடந்து, ரெண்டு பேரும் பேசாமலேப் பிரிஞ்சிட்டோம். அதுக்கு அப்புறம் எங்க பாத்தாலும் ஒருத்தருக்கொருத்தர் மூஞ்சியைத் திருப்பிட்டுப் போய்க்கிட்டு இருப்போம்.
இன்னும் ஞாபகம் இல்லை எதுக்கு ரெண்டு பேரும் சண்டை போட்டமுன்னு! ஒருவேளை சண்டை போடவேயில்லயோ? என் சேக்காளி, அதான் உங்க ஊர்க்காரன், 'கட்டை' கண்ணனும் நீயும் சண்டை போட்டதால அவன் கூடச்சேந்துக்கிட்டு நானும் உன் கூடப் பேசறதை நிறுத்திட்டனோ? என்னவோ போ! இப்போ வருத்தப்படுறன்டே!
உனக்குத் தெரியுமா, உன்னைப் பத்தின நிறைய விசயங்கள் எனக்குப் பிடிக்கும்.
முதல்ல, உன் பேரு. எனக்குத் தெரிஞ்ச முதல் கிறிஸ்டியன் பேரு உன் பேரு தான். அப்புறம் உன் இனிஷியல். ரொம்ப நாளா ஆச்சரியப்பட்டிருப்பேன் - 'வெ'னாவில ஆரம்பிக்கற ஒரு பேரான்னு! (உங்க அப்பா வெள்ளைச்சாமி அண்ணாச்சி நல்லா இருக்காங்களா? ) . அப்புறம் நீ அடிக்கடி போற உங்க அம்மா-பாட்டி ஊரு - வெள்ளைக்கோட்டை! நம்மூருக்குப் பக்கத்தில தான்னு நீ சொன்னாலும், இன்னிக்கு வரைக்கும் அது எங்க இருக்குன்னு தெரியாதுடே! பிறகு, நீ 'தாயி , தாயி'-ன்னு உன் தங்கச்சிங்களைக் கூப்பிடறது..! அப்புறம்.... , ஆங்..., உங்கப்பா ரெயில்வேல வேலை பாத்ததுனால, உனக்கும் ரயிலுக்கும் உள்ள நெருக்கம். நீ அப்பவே அடிக்கடி ரயில்லலாம் போவடே! எனக்குலாம் அதைக் கேக்கவே பிரமிப்பா இருக்கும். (நான் முத முத ரயில்ல ஏறுனது, P.G முடிச்சு வேலை தேடி மெட்ராஸ் போனதுக்கு அப்புறம் தான்! அதுவும் அந்த local எலக்ட்ரிக் ட்ரயின் தான். ) வேற... உன் வித்தியாசமான கண்கள்! (பூனைக்கண்ணுன்னு பசங்க கேலி பண்ணுவாங்க!) அப்புறம், முக்கியமா, உன்னோட தன்னம்பிக்கை! ஏ, அப்பா! எவனையும் கண்டுக்க மாட்டியே! உன் கோவத்தைப்பூராம் படிப்புல காட்டுவ! நல்ல்ல்ல பயடே, நீ! பேசி வச்சு இருந்திருக்கலாம்...! நல்ல படியா செட்டிலாயிருப்பேன்னு நம்புறேன். நானும் அதை இதைன்னு படிச்சு ஒரு மாதிரி செட்டிலாயிக்கிட்டுருக்கேன்டே!
சரி, என்ன திடீருன்னு உன் ஞாபகம்னு கேக்கிறியா? 12 வருசத்துக்கு மேலே இருக்குந்தான், நாம ரெண்டு பேரும் பாத்து...! ஆனா, என்னன்னு தெரியலடே, நேத்து ராத்திரி திடீருன்னு கனவுல வந்தே! வீட்டம்மா சொன்னாங்க, ராத்திரியெல்லாம் புலம்புனனாம்!
நல்லா இருக்கல்லா?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment